விராட் கோலி எடுத்த முடிவு.. உண்மையை சொல்ல மறுத்த ராகுல் டிராவிட்.. இந்திய அணி ட்விஸ்ட்
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகி இருப்பதாக முதலில் பிசிசிஐ அறிவித்து இருந்தது. அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் 9 நாட்கள் கழித்து துவங்க உள்ள நிலையில் அதில் விராட் கோலி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடியும் வரை விராட் கோலி பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் பரவியது. அது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கேட்ட போது அவர் அதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.
“நீங்கள் இது குறித்து தேர்வுக் குழுவிடம் கேட்பதே சரியாக இருக்கும். அவர்கள் தான் இன்னும் சில நாட்களில் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய உள்ளனர். அப்போது நங்கள் இது குறித்து பேசுவோம். கோலியுடன் அப்போது பேசி தெரிந்து கொள்வோம்” என்றார் ராகுல் டிராவிட்.
விராட் கோலியின் நண்பரும், முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது யூட்யூப் சேனலில் இது குறித்து பேசிய போது கோலி எதற்காக இந்திய அணியை விட்டு விலகி இருக்கிறார் என்ற உண்மையை போட்டு உடைத்தார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் விராட் கோலி தன் மனைவியுடன் அருகே இருக்க வேண்டும் என முடிவு செய்து அவருடன் நேரம் செலவிட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தான் விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? அல்லது தொடர்ந்து குடும்பத்துடன் இருக்க முடிவு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது தனிப்பட்ட முடிவில் யாரும் தலையிட முடியாது என்றாலும் இந்திய அணியின் பேட்டிங் விராட் கோலி இல்லாமல் தள்ளாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் அடித்த சதம் ஆகியவற்றால் மட்டுமே இந்திய அணி வென்றது. இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் கூட அடிக்கவில்லை.