மாருதிக்கு போட்டியாக ஹூண்டாய் களமிறக்கி உள்ள புதிய கார்!! விலை தெரிஞ்சா இப்போவே ஷோரூமுக்கு போய்டுவீங்க!
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில் புதியதாக ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) (Sportz (O)) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஐ20 காரை பற்றியும், மற்ற வேரியண்ட்களில் இருந்து இந்த புதிய வேரியண்ட் எந்த அளவிற்கு சிறப்பானது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான ஹேட்ச்பேக் காரை ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் ஐ20 காரில் புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட் ரூ.8.73 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐ20 காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் இது ரூ.35,000 அதிகமாகும். இந்த கூடுதல் விலைக்கு ஏற்ப புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் சில வசதிகளை கூடுதலாக பெற முடியும். ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை ட்யூயல்-டோனில் ரூ.8.88 லட்சம் என்கிற விலையில் பெறலாம். தோற்றத்தில், வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கும், புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.
ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் சில வசதிகளை கூடுதலாக பெறலாம். குறிப்பாக, இந்த புதிய ஐ20 காரில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் கிடைக்கும். முன்னதாக இந்த வேரியண்ட், ஐ20 காரின் அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களில் மட்டுமே கிடைத்து வந்தது.
அத்துடன், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கதவுகளின் ஆர்ம்ரெஸ்ட்டில் ஃபாக்ஸ் லெதர் ஃபினிஷிங் உள்ளிட்டவற்றையும் புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் பெற முடியும். இவை மட்டுமின்றி, உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்றவற்றையும் ஐ20 ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) காரில் பெறலாம்.
இந்த புதிய காரில் 16 இன்ச்சில் இரும்பு சக்கரங்களே கிடைக்கும். ஐ20 காரின் டாப் வேரியண்ட்களில் கிடைப்பதை போன்றதான அலாய் சக்கரங்கள் கிடைக்காது. அதேபோல், ஸ்டாண்டர்ட் சவுண்ட் சிஸ்டம் மட்டுமே இந்த புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் கிடைக்கும். டாப் வேரியண்ட்களில் கிடைக்கக்கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டத்தை இந்த காரில் பெற முடியாது.
ஸ்டாண்டர்ட் சவுண்ட் சிஸ்டத்தில் காரினுள் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஸ்பீக்கர்கள் இருக்கும். அதேநேரம், முன்பக்கத்தில் ட்விட்டர்ஸும் கிடைக்கும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், இபிடி ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், இஎஸ்சி மற்றும் வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் கண்ட்ரோலை புதிய ஐ20 ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) காரில் பெறலாம்.
இந்த புதிய வேரியண்ட்டை 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். அதிகப்பட்சமாக 83 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜினை ஐ20 காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் சிவிடி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் வாங்கலாம்.