மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தை பெற இந்திய மக்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸுக்கு பிரிட்டன் மன்னராக முடி சூட்டப்பட்டது. அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது சமீபத்திய மருத்துவமனை பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புற்றுநோயின் வகை; எந்த நிலையில் அது உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
ஆனால், மன்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நேர்மறை எண்ணத்துடன் இருக்கும் அவர், முடிந்தவரை விரைவில் பொதுப் பணிக்குத் திரும்புவதை எதிர்நோக்குவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வழக்கமான அலுவல்களை மேற்கொள்வார் என்றாலும், பொதுப் பணிகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனையில் இருந்து வெளியேறியுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் மகன் ஹாரி, தனது தந்தையுடன் பேசியதாகவும், விரைவில் அவரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த இளவரசி டயானாவுடன் மன்னர் சார்லஸுக்கு பிறந்த இரண்டு மகன்களில் இளையவரான ஹாரி, பிரிட்டன் அரண்மையில் இருந்து வெளியேறி தனது காதல் மனைவி மேகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவர், விரைவில் இங்கிலாந்து சென்று மன்னரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாக இளவரசர் ஹாரிக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.