விண்வெளியில் ஒரு அற்புதம்! பூமியும் சந்திரனும் அருகருகே இருக்கும் அரிய புகைப்படம்!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நமது பிரபஞ்சத்தின் பிரமிக்க வைக்கும் படங்களை தொடர்ந்து படம்பிடித்து, வெளியிட்டு வருகிறது. விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் மற்றொரு புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
நாசாவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகும் கண்கவர் போட்டோக்களும் வீடியோக்களும் விண்வெளித் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஒரு பொக்கிஷமாகும். இப்போது, அதன் சமீபத்திய பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரே ஃப்ரேமுக்குள் சந்திரனும் பூமியும் அருகில் இருக்கும் காட்சியின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
படத்தில், பிறைச் சந்திரன் ஓரிடத்தில் சிறியதாகத் தெரிகிறது. அதன் அருகில் வளிமண்டலத்தில் மங்கலாகத் தெரியும் வெள்ளை மேகங்களுடன் பூமி நீல நிறத்தில் இருக்கிறது.
“நமது சந்திரன் இப்போது தேயும் கட்டத்தில் உள்ளது. அங்கு சூரிய ஒளியின் பெரும்பகுதி அதன் ஒரு பக்கத்தை ஒளிரச் செய்கிறது – இது பூமியிலிருந்து நாம் நேரடியாகப் பார்க்க முடியாத பக்கம்” என்று நாசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளது.
“சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பார்த்தால், மேல் நடுப்பகுதியில் சந்திரன் ஓரளவு ஒளிர்கிறது. வளிமண்டலத்தில் மங்கலான வெள்ளை மேகங்களுடன் பூமி நீல நிறமாகத் தெரிகிறது. படத்தின் கீழ் இடதுபுறத்தில் இருந்து மேல் வலதுபுறம் வரை நீண்டுள்ளது. விண்வெளி கருப்பு நிறத்தில் சந்திரனைச் சூழ்ந்துள்ளது” என நாசா படத்தைப் பற்றி விளக்கி இருக்கிறது.
இந்தப் பதிவை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் பார்த்துள்ளனர். பலரும் இந்தப் புகைப்படம் குறித்து வியந்து தங்கள் கருத்துகளைப்ப பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர், “படம் மற்றும் படத்தின் தலைப்புக்கு 10/10” என்று மார்க் போட்டிருக்கிறார். “சுவாரஸ்யமான படங்கள்…!” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆம், அற்புதம்! மேலும், நாசாவின் பதிவுகளின் தலைப்புகளையும் நான் விரும்புகிறேன்!” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் மற்றொரு படத்தைப் பகிர்ந்திருந்தது. நவம்பர் 14, 2023 அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் படம் அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களுக்கு மேலே 260 மைல் (418 கி.மீ.) தொலைவிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறியது.