ரூ.540 கோடிக்கு ஒப்பந்தம்… ஸ்பெயினில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்த்த ஸ்டாலின்
தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்கும் வகையில் உலகமுதலீடு மாநாடு மற்றும் வெளிநாடு பயணத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், ஸ்பெயின் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5-02-2024) ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம்,
பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் எடிபோன் நிறுவனம், இரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர்தொழில்நுட்ப உயிரியல் பொருள்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளைச் சந்தித்து, வளமான வாய்ப்புகள் உள்ள தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
540 கோடிக்கு ஒப்பந்தம்
இச்சந்திப்பின் பலனாக எடிபான் நிறுவனத்துடன் ரூ.540 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு. முதலமைச்சரின் செயலாளர் டாக்டர் பு. உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகம் திரும்பும் ஸ்டாலின்
முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தமிழகம் திரும்ப உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றோரு பதிவில், இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன். நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன் என கூறியுள்ளார்.