ஒரு தேர்தல் அதிகாரி வேலை செய்யும் லட்சணமா இது? உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் ஆவேசம்
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதில் சில குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தலுக்கு முன்பு “இந்தியா” கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால்.. அவரே வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான சாடின.இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. ‘‘சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாத ஓட்டாக இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் அதிகாரி மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரிசண்டிகர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார். சண்டிகர் மேயர், மாநகராட்சி கூட்டத்தை கூட்ட தடைவிதிக்கிறேன்.
ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தின் தூய்மை மட்டுமே இந்த நாட்டில் உறுதியான சக்தியாக உள்ளது’’ என்றார்.
“ஒரு தேர்தல் அதிகாரி வேலை செய்யும் லட்சணமா இது? யாராவது பார்க்கிறார்களா என கவனித்து, சிசிடிவி கேமராவை பார்த்த பின்பும் வாக்குச்சீட்டின் கீழே பேனாவால் எழுதுகிறார். அவரிடம் சொல்லுங்கள், உச்ச நீதிமன்றம் அவரை கவனிக்கிறது என்று.. நேர்மையான தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதில் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றார்.