இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை… தண்டனை போதாது என வருந்திய பெற்றோர்: பிரித்தானிய அரசு நடவடிக்கை

இங்கிலாந்தில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் உட்பட மூன்று பேரைக் கொலை செய்த நபருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என்று கூறி அந்தப் பெண்ணின் பெற்றோர் வருத்தப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில், குற்றவாளியின் தண்டனை மீளாய்வு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அப்பாவிகள் மூவரைக் கத்தியால் குத்திய நபர்
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, அதிகாலையில், நாட்டிங்ஹாம் பல்கலை மாணவர்களான கிரேஸ் (Grace O’Malley-Kumar, 19) மற்றும் பர்னபி (Barnaby Webber, 19) என்னும் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Valdo Calocane (31) என்னும் நபர் பர்னபியைக் கத்தியால் குத்தினார். தன் நண்பனைக் காப்பாற்ற Valdoஉடன் போராடிய கிரேஸுக்கும் கத்திக்குத்து விழ, இருவரும் உயிரிழந்தார்கள்.

அதைத் தொடர்ந்து Ian Coates (65) என்பவரைக் கொலை செய்த அந்த Valdo, அவரது வேனை திருடிச் சென்று பாதசாரிகள் மீது மோதினார்.

கைது செய்யச் சென்ற பொலிசாரை நோக்கி கத்தியுடன் ஓடிவந்த அவரை பொலிசார் டேசர் மூலம் தாக்கிப் பிடித்தார்கள்.

தண்டனை
Valdo மீது முதலில் மூன்று கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தனக்கு மன நலப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூற, மன நல மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து அளித்த முடிவுகளின்படி, அவரை மன நல மருத்துவமனையில் காலவரையறையின்றி அடைப்பது என கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், நீதித்துறையினர் முதலானோர் அடங்கிய தீர்ப்பாயம் ஒன்று அவரை பரிசோதித்து, அவரால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என முடிவு செய்தபின்னரே அவர் விடுவிக்கப்படுவார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் கருத்து
ஆனால், Valdoவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என கிரேஸின் பெற்றோர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கிரேஸின் தந்தையான Dr Sanjoy Kumar, எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை. அவள் ஒரு சிறந்த நபர். அவளைப் பொருத்தவரை, தனக்கு சரியான தீர்ப்பு கிடைக்காததால் அவள் ஏமாற்றம்தான் அடைந்திருப்பாள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரித்தானியாவின் அட்டர்னி ஜெனரல், Valdoவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மீளாய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்டர்னி ஜெனரலின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், Valdoவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதா என ஆராய்ந்து முடிவு செய்யுமாறு தங்களுக்கு கோரிக்கை வந்துள்ளதாகவும், ஆகவே, சட்டத்துறை அலுவலர்கள் அந்த வழக்கு குறித்து ஆய்வு செய்து, அந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *