SUV கார் விற்பனையில் மாருதியை முந்திய மஹிந்தரா.. சரிவைக் கண்டது எப்படி?
2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கியது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் இந்திய SUV கார் விற்பனையில் 25 சதவிகித சந்தை பங்களிப்புடம் முதலிடத்தைப் பிடித்தது மாருதி நிறுவனம்.
ஆகஸ்ட் மாதம் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் போர்ட்ஃபோலியோ சரிய ஆரம்பித்தது. அதுவும் குறிப்பாக 2023 கிறிஸ்துமஸ் சீசனில் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்களின் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் இந்திய SUV மார்க்கெட்டில் முதலிடத்தைப் பறிகொடுத்தது மாருதி சுசுகி நிறுவனம். மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்தையே மாருதி நிறுவனத்தால் பிடிக்க முடிந்தது. இதனால் 2023 டிசம்பரில் பிரெஸ்ஸா AT காரை தவிர்த்து மாருதியின் மற்ற அனைத்து கார்களுக்கும் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டன.
பல SUV மாடல் கார்கள் மற்றும் அதிகமான தயாரிப்பு திறன் ஆகியவை காரணமாக செப்டம்பரில், அதாவது சரியாக இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கும்போது முதலிடத்தைப் பிடித்தது மஹிந்தரா நிறுவனம்.
2024-ம் நிதியாண்டில் SUV கார்களின் விற்பனையை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட மாருதி நிறுவனம், அதற்கேற்ற வகையில் SUV கார் பிரிவில் முன்னணி இடத்தையும் பிடித்தது. 2024 நிதியாண்டில் மட்டும் 5 லட்சம் SUV கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 மீட்டருக்கும் குறைவான SUV கார்களை 33,350 என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்தது மாருதி நிறுவனம். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 9,915 என்ற அளவில்தான் இருந்தது. இந்தப் பிரிவில் ஃப்ரான்ஸ் (Fronx), பிரெஸ்ஸா (Brezza), கிராண்ட் விடாரா (Grand Vitara) மற்றும் ஜிம்னி (Jimny) மாடல்களை விற்பனை செய்கிறது மாருதி.
SUV பிரிவில் மாருதிக்கு ஏற்பட்ட சரிவு :
உள்நாட்டு SUV விற்பனையில் ஒவ்வொரு வருடமும் மாருதி நிறுவனம் 24 சதவிகித வளர்ச்சியை பெற்றாலும், இவர்களை விட அதிகமாக மஹிந்தரா நிறுவனம் 39 சதவிகித வளர்ச்சியை பெற்று வருகிறது. இவர்களின் பிரபலமான SUV கார்களான தார், ஸ்கார்பியோ மற்றும் XUV போன்றவை 2023-ம் ஆண்டில் நன்றாக விற்பனை ஆகின. இந்தக் காலகட்டங்களில் மஹிந்தராவின் மாதாந்திர விற்பனை வளர்ச்சி 20 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக வளர்ச்சி கண்டிருந்தது.