அஜித்பவாருக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சின்னம் சொந்தம்..!
காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி, அதன் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கியவர் சரத் பவார். இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் கட்சித் தலைவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனிடையே, கடந்த சில வருடங்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சற்று ஓய்ந்திருந்தார் சரத்பவார். இந்த சமயத்தை பயன்படுத்தி, அவரது அண்ணன் மகனான அஜித் பவார், கட்சியில் தனக்கென ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இந்த சூழலில், கடந்த ஆண்டு சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் கட்சியை உடைத்தார். மேலும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பாஜகவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து அவர் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். எனினும், சில மாதங்களில் அவர் பதவி இழந்தார்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும், அஜித் பவாரும் உரிமைக் கோரி வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக கடந்த ஓராண்டாக விசாரித்து வந்தது. இந்நிலையில், இன்றைக்கு தனது இறுதிக்கட்ட விசாரணையை நடத்திய தேர்தல் ஆணையம், அஜித் பவாருக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என அதிரடியாக உத்தரவிட்டது.
அஜித் பவார் அணிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தப்படாது குறித்தும், கட்சியை தனியார் நிறுவனம் போன்று நடத்தியதாகவும் தேர்தல் கமிஷன் குற்றம்சாட்டியிருக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பு அஜித் பவார் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதும் அஜித் பவார் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் கமிஷனின் அறிவிப்பு `ஜனநாயக படுகொலை’ என்றும், `துரதிஷ்டவசமானது’ என்றும் சரத் பவார் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவார் அணிக்குச் செல்கிறது. மேலும் சரத் பவார் அணி தங்களது அணிக்கு என்ன பெயர் வேண்டும் என்பது குறித்தும், என்ன சின்னம் வேண்டும் என்பது குறித்தும் வரும் 7-ம் தேதி மாலை 3 மணிக்குள் தெரிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கெடு விதித்திருக்கிறது.