தி.மு.க., பா.ஜ.க. இடையே பார்லி.,யில் வாக்குவாதம்..!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று காலை மக்களவை தொடங்கிய சிறிது நேரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கான உரிய வெள்ள நிவாரணத் தொகையை ஒதுக்காதது குறித்து பேசினார். அப்போது பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான நிதியானந்த ராய் குறுக்கிட்டதாக தெரிகிறது.

இதனால் டி.ஆர்.பாலு, அமைச்சரை கடுமையாக விமர்சித்தார். நிதியானந்த ராய் எம்.பி.யாக இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் 2 கட்சிக்கு எம்.பி.களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சரை விமர்சித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

தொடர்ந்து, நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என விமர்சித்தார். “சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே மாதம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இரண்டு புயலுக்கான நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கேட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரையும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால், வெள்ள நிவாரணம் எப்போது வழங்கப்படும்? எவ்வளவு கொடுக்கப்படும்? என்று உத்தரவாதம் தரப்படவில்லை. மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையும், தமிழ்நாடு அரசின் அறிக்கையும் மத்திய அரசின் முன்பு சமர்பிக்கப்பட்டுள்ளது. எப்போது நிவாரணத் தொகை வழங்கப்படும்? குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதை போல் எங்களுக்கும் நிவாரண தொகை ஒதுக்கப்படுமா?

மாநில அரசின் பேரிடர் நிதிக்கு வழங்க வேண்டிய நிதியை வெள்ள நிவாரணம் எனக்கூறி குழப்ப முயற்சிக்காதீர்கள். தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும், மாநில பேரிடர் நிதிக்கும் வித்தியாசம் உள்ளது. பிற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை ஒதுக்கியதை போல் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.” இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

இதனைத்தொடர்ந்து மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராயின், “தமிழ்நாட்டுக்கு முழு நிவாரண நிதியும் ஒதுக்கியுள்ளோம். பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் வெள்ள சேதத்தை பார்வையிட பாதுகாப்பு அமைச்சரை அனுப்பி வைத்தார். வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிய திட்டங்களை சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. வெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு குழுவினர் வரும் முன்னர் மத்திய அரசின் குழுதான் முதலில் சென்றது.” இவ்வாறு தெரிவித்தார்.

மக்களவையில் வெள்ள நிவாரணம் குறித்த விவாதத்தின் போது தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாலும், எம்.பி டி.ஆர்.பாலுவின் பேச்சை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததாலும், மக்களவையில் இருந்து அனைத்து தி.மு.க. எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *