சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை செயல்பட அனுமதிக்க முடியாது..!
கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம், தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, சுமார் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியும், ஒரு வார காலம் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, தீர்ப்பாய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரின் முன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்ததது.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது., “அமோனியம் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய நீரி, ஐஐடி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழு அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியம் எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கோரமண்டல் நிறுவனம் விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுக்கிறது. கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே விபத்துக்கு காரணம். எனவே, விதிகளை மதிக்காத இது போன்ற நிறுவனங்களை இனி தமிழகத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரமண்டல் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.