அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்?
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி.
அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக்கை தயாரித்து வருகிறார். வருண் தவான் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நாயகிகளாக நடிக்க உள்ளனர். இப்படத்தை காளிஸ் இயக்குகிறார்.
மேலும், தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் அட்லி தயாரிக்க உள்ளாராம். ஆனால், இதன் இயக்குநர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தன் தயாரிப்பில் முதல் படம் வெளியாகாத நிலையில் 4 படங்களை அட்லி தயாரிக்க முன்வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்கவும் அட்லி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா – 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.