பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை தொடுத்த வழக்கு ரத்து
பாடலாசிரியரிரும், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி தொடுத்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சினேகன் தனது சினேகம் அறக்கட்டளையின் மூலம் சமூகவலைதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். சினேகம் என்ற பெயரில் ஜெயலட்சுமியும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, சினேகன் தன்மீது அவதூறு பரப்பி வருவதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சினேகன், ஜெயலட்சுமி இருவரையும் அழைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து, சமரசம் செய்து அனுப்பினர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அத்துடன் எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் தரப்பு, ஜெயலட்சுமி மீது தான் கொடுத்த புகாருக்கு பதில் புகாராக, ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.