ஓடிடியில் வெளியாகும் மதச்சர்ச்சையில் சிக்கிய திரைப்படம்
விபுல் அம்ருத்லால் ஷா இயக்கத்தில் உருவான, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அப்படம் உண்மைக்குப்புறம்பான செய்திகளை கொண்டிருப்பதாகவும், மதத்துவேசத்தை பரப்புவதாகவும் சர்ச்சையும், எதிர்ப்பும் எழுந்தன.
கேரளாவில் உள்ள இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்யும் முஸ்லீம் இளைஞர்கள் அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதுதான் தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை. 3000 க்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் இதுபோல் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று அப்படம் கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்தன.
கேரளாவில் மொத்தமே 3 பெண்கள்தான் இப்படி முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டனர். அதில் இருவர் கேரளாவில்தான் உள்ளனர். ஒருவர் கணவருடன், தனது சொந்த விருப்பத்தின்பேரில் வாழ்ந்து வருகிறார். இந்தத் தகவலை ஆதாரத்துடன் வெளியிட்ட பின், 3000 என்ற எண்ணிக்கையை படக்குழு 3 என மாற்றிக் கொண்டது.
கடந்த மே 5 ம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தை மேற்கு வங்க அரசு தடை செய்தது. தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக, தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடுவதில்லை என மல்டிபிளக்ஸ்கள் தாமாக முன்வந்து அறிவித்தன. எனினும் மேற்கு வங்கம் தவிர்த்து, கேரளா, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் படம் வெளியானது. தமிழ்நாடு மற்றும் படத்தின் கதைக்களமான கேரளாவில் படம் படுதோல்வியடைந்தது. வடமாநிலங்களில் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது. உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் படம் வசூலித்தது.
தவறான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மதத்துவேசத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை வெளியிட எந்த ஓடிடி தளமும் முன்வரவில்லை. இந்நிலையில், ஸீ 5 ஓடிடி தளம் வரும் 16 ம் தேதி தி கேரளா ஸ்டோரி படத்தை இந்தி, தமிழ் உள்பட 6 மொழிகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.