“இனி என் சம்பளம் 4 கோடி.. தயாரிப்பாளர்களிடம் அப்படி தான் சொல்லப்போறேன்” – ராஷ்மிக்காவின் லேட்டஸ்ட் பதிவு வைரல்
மிகப்பெரிய காப்பி எஸ்டேட்டினுடைய முதலாளியின் மகளாக கர்நாடகாவில் பிறந்த பெண் தான் ராஷ்மிகா மந்தானா. சிறு வயது முதலே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது 20வது வயதில் கன்னடத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தானா கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் “சுல்தான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் நாயகியாக அறிமுகமானார்.
இதுவரை தமிழில் கார்த்தியின் “சுல்தான்” மற்றும் தளபதி விஜயின் “வாரிசு” ஆகிய இரு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்ற பொழுதும் இவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். மிகக் குறைந்த காலத்தில் “நேஷனல் கிரஷ்” என்று கூறும் அளவிற்கு மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா.
இவருடைய இந்த எட்டு ஆண்டு கால பயணத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். தற்பொழுது இவருடைய நடிப்பில் “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் “ரெயின்போ” மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் “தி கேர்ள் பிரண்ட்” மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு திரைப்படம் என்று பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் இறுதியாக ஹிந்தியில் வெளியான ரன்பீர் கபூரின் “அனிமல்” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மந்தானா தனது சம்பளத்தை ஒரு படத்திற்கு நான்கு முதல் 4.5 கோடிகளாக உயர்த்தி உள்ளதாக பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.
ஆனால் அவைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராஷ்மிகா மந்தானா தனது ‘X’ பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் தனது தயாரிப்பாளர்களிடம் இனி இணையத்தில் கூறுவது போல சம்பளம் கேட்டு உள்ளதாகவும், அவர்கள் ஏனென்று கேட்டால் இணையத்தில் தான் நான் அவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று கூறுகிறார்கள், ஆகவே அதையே கொடுங்கள் என்று கூறப் போவதாகவும் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தான் அவ்வளவு சம்பளம் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி பரவிக் கொண்டிருந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.