அம்பானியும், அதானியும் ஏன் திவாலான நிறுவனங்களை போட்டி போட்டு வாங்குறாங்க தெரியுமா?
பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு நாம் என்னெவெல்லாம் கவனிப்போம், அந்த நிறுவனத்தின் நிதி நிலவரம், முதல் அதன் PE விகிதம் என பலவற்றை கவனிப்போம்.
இதில் முக்கிமாக அந்த நிறுவனம் எவ்வளவு வருவாயை ஈட்டுகிறது? அந்த நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது? நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் எப்படி உள்ளது? ஆகியவற்றை ஆராயாமல் ஒரு புதிய நிறுவனத்தில் முதலீடு செய்ய மாட்டோம்.
ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களும், பணக்காரர்களுமான அதானி மற்றும் அம்பானி திவாலான நிறுவனங்களைத் தேடித் தேடிச் சென்று வாங்குகின்றனர். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்.
திவாலான நிறுவனங்களை வாங்க போட்டி: கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவருமே சத்தீஸ்கரில் உள்ள பவர் நிறுவனமான லேன்கோ அமர்கண்டாக்-ஐ (Lanco Amarkantak) வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். திவாலான இந்த நிறுவனத்தை வாங்க அதானி மற்றும் அம்பானி போட்டி போட்டுக் கொண்டு ரூ.4,100 கோடியை கொடுக்க முன் வந்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் கடந்த மாதம் அதானி பவர் நிறுவன வாரியம் கோஸ்டல் எனர்ஜென்ஸ் என்ற திவாலான நிறுவனத்தை ரூ.3,500 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் திவாலான பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை 24 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வாங்குவதற்கு தயாராக இருந்தது இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். ஏற்கனவே அதானி, அனில் அம்பானியின் திவாலான நிலக்கரி நிலையங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
திவாலான நிறுவனங்களை வாங்குவதற்கான ரகசியம்:
பெரும் முதலாளிகள், பெரும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் ஏன் திவாலான நிறுவனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற கேள்வி இங்கே எழுகிறது.
திவாலான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் கிடைக்கின்றன நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் எப்படியாவது தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த விலைக்கு விற்பதற்கு தயாராக இருக்கின்றன.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை வாங்கி முதலீடு செய்து லாபம் காண்பது எளிது தொடக்கத்தில் இருந்து ஒரு விஷயத்தை தொடங்க வேண்டிய அவசியம் கிடையாது.
குறிப்பாக இது நாள் வரை அவர்கள் தொடாத ஒரு துறையில் எளிதாக கால் பதிப்பதற்கு இத்தகைய திவாலாகும் நிறுவனங்கள் உதவுகின்றன
எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற கணிப்பில், குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவது தான் இவர்களின் ராஜதந்திரம். இந்த யுக்தி தான் பல்வேறு துறைகளில் இவர்கள் கால்பதிக்க உதவுகிறது மற்றும் பெருமளவில் சொத்து சேர்க்கவும் வழிவகுக்கிறது.