சிறிய நகரத்தில் இருந்து எவ்வளவு பெரிய கனவோட வந்து இருப்பாரு!! ரியாலிட்டி ஷோவில் இப்படியா நடக்கனும்…!
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) உடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட காருக்கு, சோனி (Sony) நடத்தும் ரியாலிட்டி ஷோவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனுமதி நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஒரு பொழுதுப்போக்கு ரியால்டி ஷோவில் கூட வெற்றி பெறாத அந்த ஏஐ காரை பற்றியும், அதனை உருவாக்கிய இந்தியரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களை ஆட்சி செய்யும் என கூறுபவர்கள் உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் நிலையில், நாம் மெல்ல மெல்ல கணினி உலகத்திற்குள் நுழைந்துக் கொண்டிருக்கிறோம். ஏஐ சிப்களின் பயன்பாடு ஆட்டோமொபைல் துறையிலும் ஏற்கனவே நுழைந்துவிட்டது.
விபத்துகளை குறைக்கும், டிரைவருக்கு நிறைய சவுகரியங்களை வழங்கும் என கூறி கார்களில் அடாஸ் (ADAS) வழங்கும் பழக்கம் கார் நிறுவனங்களிடையே பரவி வருகிறது. டாடா புதியதாக அறிமுகப்படுத்தவுள்ள கர்வ் எஸ்யூவி காரில் கூட அடாஸ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடாஸ், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்களின் துவக்க நிலை என சொல்லலாம்.
இன்று நிறைய கார்களில் அடாஸ் வந்துவிட்டாலும், முதலாவதாக இந்தியாவில் அடாஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட காராக எம்ஜி அஸ்டர் எஸ்யூவி விளங்குகிறது. 2021 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்டர் நம் நாட்டின் முதல் ஏஐ காராக பார்க்கப்படுகிறது. ஆனால், சோனி நடத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியில், சமீபத்தில் இந்தியாவின் முதல் ஏஐ கார் என கூறி ஒரு கார் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன் நிகழ்ச்சியில் அந்த கார் நிராகரிக்கவும் பட்டுள்ளது. சோனியின் இந்த ரியாலிட்டி ஷோவின் பெயர், ஷார்க் டேங்க் இந்தியா (Shark Tank India). இதன் 3வது சீசன் தற்சமயம் நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமின்றி, மொபைல் போனிலும் இந்த ரியாலிட்டி ஷோவை காணலாம். அத்துடன், யூடியூப்பிலும் இந்த ஷோ தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 3-இன் சமீபத்திய ஒரு எபிசோடில் இந்தியாவின் முதல் ஏஐ கார் என கூறப்படும் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், யாவாட்மலை சேர்ந்த கண்டுப்பிடிப்பாளரான 27 வயதான ஹர்சல் மஹாதேவ் நாக்சேனே ஏஐ கார்களை உருவாக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டதே இந்த சோனி ரியாலிட்டி ஷோவில் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த பச்சை நிற ஏஐ கார் ஆகும். சுமார் ரூ.60 லட்சம் செலவில் நாக்சேனே மற்றும் அவரது குழுவினர் இந்த காரை 18 மாதங்களாக வடிவமைத்தனர் என சொன்னால் நம்ப முடிகிறதா? இது ஒரு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார் ஆகும்.
இந்த காரில் உள்ள ஹைட்ரஜன் சிலிண்டர்களை வெறும் 5 நிமிடங்களில் முழுவதுமாக நிரப்பிவிடலாம். இவ்வாறு நிரப்பப்பட்ட ஹைட்ரஜன் சிலிண்டர்கள் மூலம் ஆயிரம் கிமீ-க்கும் மேல் பயணிக்கலாம் என்கிறார், ஹர்சல் மஹாதேவ் நாக்சேனே. ஷார்க் டேங்க் இந்தியா ரியாலிட்டி ஷோவின் நடுவர்கள் இந்த காரில் மும்பை சாலைகளில் பயணம் செய்து பார்த்தனர். வளைவுகளில் சிறப்பாக திரும்பினாலும், செங்குத்தான மேடுகளில் ஏறுவதற்கு இந்த கார் மிகவும் சிரமப்பட்டு உள்ளது.