TNPL Auction 2024: கடந்த ஆண்டை விட ரூ.4.4 லட்சம் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட சஞ்சய் யாதவ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 8வது சீசன் இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
இதுவரையில் நடந்த 7 சீசன்களில் முறையே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 4 முறையும், லைகா கோவை கிங்ஸ் 2 முறையும் டிராபி கைப்பற்றியுள்ளன. இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணிகள் இணைந்து டிராபியை கைப்பற்றின. மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டூட்டி பாட்ரியாட்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை வென்றுள்ளன.
இந்த நிலையில் தான் 8ஆவது சீசனுக்கான ஏலம் தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் கலந்து கொண்டுள்ளார். இந்த ஏலத்தில் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ.22 லட்சத்திற்கு சாய் கிஷோர் ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலமாக அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாய் கிஷோர் படைத்துள்ளார்.
இதே போன்று சஞ்சய் யாதவ்வும் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎல் ஏலத்தில் ரூ.17.6 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்ட சஞ்சய் யாதவ்வை இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் ரூ.22 லட்சம் கொடுத்து ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியானது ஏலம் எடுத்துள்ளது.