இந்தியா – மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க முடிவு – உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்திய – மியான்மர் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணால பிரதேச மாநிலங்களை ஒட்டி ஆயிரத்து 643 கிலோமீட்டர் தொலைவிற்கு மியான்மர் எல்லை அமைந்துள்ளது.

இந்நிலையில், மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படும் என்றும், வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதால், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியா மியான்மர் எல்லையை ஒட்டி இரு பகுதிகளிலும் 16 கிலோமீட்டர் வரை எந்த ஆவணமும் இன்றி சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்கும் தற்போதைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கருதப்படுகிறது.

இதனிடையே, மியான்மர் நாட்டின் ராக்கைன் பகுதிக்கு செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும் ராக்கைன் பகுதிக்கு சென்றுள்ள இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *