எப்பேர்பட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. சீக்கிரமே பலன் கிடைக்கும்..!
சாம்பார், புளிக் குழம்பு, ரசம், கூட்டு என அனைத்து சமையல்களிலும் நாம் தவறாமல் சேர்த்துக் கொள்கின்ற ஒரு பொருள் தக்காளி ஆகும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் தக்காளியை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் அபரிமிதமான ஆற்றல் கிடைக்கிறதாம்.
தக்காளியில் உள்ள நீர்ச்சத்து நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நார்ச்சத்து, மாவுச்சத்து, விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் தக்காளியில் அபரிமிதமாக உள்ளன. கொலஸ்ட்ரால் மிகுதியால் அவதி அடையும் நோயாளிகளுக்கு தக்காளி ஒரு வரம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அது உண்மைதான். தக்காளியை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் குறைகிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி 240 மில்லி அளவுக்கு தக்காளி ஜூஸ் அருந்தி வந்தால் கொலஸ்ட்ரால் 10 சதவீதம் வரையிலும் குறைகிறதாம்.
எப்படி வேலை செய்கிறது?
தக்காளியில் ஆற்றல் மிகுந்த ஆண்டிஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை 10 சதவீதம் வரையில் குறைக்கிறது. தினசரி ஒரு கிளாஸ் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வந்தால் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும் என்று சர்வதேச அளவிலான உணவு அறிவியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது அதில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது. உப்பு சேர்த்துக் கொண்டால் பெரிய அளவுக்கு பலன் கிடைக்காது என்று தெரிவிக்கின்றனர்.
கல்லீரல் நலனுக்கு உகந்தது :
கல்லீரல் செயல்பாட்டிற்கு தக்காளியில் உள்ள சத்துக்கள் உறுதுணையாக அமைகின்றன. கல்லீரலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்கும் தக்காளி பயனுள்ளதாக உள்ளது. அதேபோல இதயம் தொடர்புடைய நோய்களை தடுப்பதற்கும் தக்காளி உதவியாக அமைகிறது.
சிறுநீரகக் கல் நோயாளிகள் உஷார்…
என்னதான் தக்காளி மூலம் நமக்கு எண்ணற்ற பலன் கிடைக்கிறது என்றாலும், உங்களுக்கு அடிக்கடி சிறுநீரகக் கல் ஏற்படுகிறது அல்லது கால்சியம் நிறைந்த உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்வது குறித்து நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
அதேபோல சாமானிய மக்களும் கூட தக்காளியை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக கால்சியம் சத்து கொண்ட உணவை குறைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.
தக்காளியை பச்சையாக சாப்பிடுவதற்கு அல்லது ஜூஸ் வடிவில் சாப்பிடுவதற்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சூப் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். சீரகம், வெங்காயம், பூண்டு, மிளகு உள்ளிட்டவற்றோடு தக்காளி சேர்த்து தயார் செய்யப்படும் சூப் சுவை மிகுந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.