தினமும் பெண்கள் குளிர்பானம் குடித்தால் கல்லீரல் புற்றுநோய் வருமாம் – எச்சரிக்கும் ஆய்வு!
பெண்கள் தினமும் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதால் கல்லீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட ஹெபடைடிஸ் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்காக 1,00,000-க்கும் மேற்பட்ட மாதவிடாய் சுழற்சி நிறைவடைந்த பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் சோடா ஒருவரின் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பாதித்து உடல் பருமன், புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, செரிமானப் பிரச்சனைகள், எலும்பு ஆரோக்கிய பிரச்சனைகள் ஆகியவற்றை கொண்டு வருகிறது. ஆண்களை விட பெண்களிடத்தில் இந்த ஆபத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய், பிரசவத்தில் சிக்கல், இதயப் பிரச்சனைகள், கீல்வாதம் ஆகியவை வருவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்போதெல்லாம் திருமண விருந்துகளிலும் கேளிக்கை கொண்டாட்டங்களிலும் நண்பர்களோடு ஒன்று கூடும்போதும் அதிகமாக குளிர்பானங்கள் பரிமாறப்படுகின்றன. ஆனால் இது உடல்நலத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. குளிர்பானத்தினால் ஏற்படும் ஆபத்துகள் ஏற்கனவே நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் குளிர்பானத்தால் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதை தெரியப்படுத்தியுள்ளது.
சோடா, எனர்ஜி டிரிங், இனிப்பு காஃபிகளை தினமும் பருகுவதால் உடல் பருமன் மட்டுமின்றி டைப் 2 டயாபடீஸ், இதய நோய்கள், நாள்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்துள்ளது. இதிலுள்ள சர்க்கரை நமக்கு புற்றுநோயை கொண்டு வருவதில்லை. மாறாக இதை தினமும் பருகுவதால் அதிகப்படியான கலோரிகள் நம் உடலில் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கிறது.
இதன் விளைவாக கணையம், மார்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறது. தினமும் குளிர்பானம் பருகுபவர்களுக்கு சிரோசிஸ், கல்லீரல் வீக்கம் வர வாய்ப்புள்ளது. சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதால் நமது ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரித்து இன்சுலின் எதிர்ப்புக்கு காரணமாகிறது. கல்லீரல் புற்றுநோய்க்கு இன்சுலின் எதிர்ப்பு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
தினமும் குளிர்பானம் பருகுவதால் பெண்களுக்கு ஏற்படும் 5 முக்கியமான பக்கவிளைவுகள் :
சிக்கலான பிரசவம் : அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல்பருமன், டயாபடீஸ் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. இதுபோன்ற உடல்நலக் குறைபாடுகள் இரு பாலினத்தவருக்கும் வரும் என்றாலும், பிரசவ சமயத்தில் பெண்களுக்கு கடுமையான சிரமத்தை அளிக்கும்.
புற்றுநோய் ஆபத்து : சர்க்கரை சேர்க்கப்படாத அல்லது சுகர் ஃப்ரீ என கூறப்படும் குளிர்பானங்களில் aspartame என்ற இனிப்பூட்டி சேர்க்கப்படுகிறது. இது பல மெடபாலிக் நோய்கள், முக்கியமாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. தினமும் சோடா குடிக்கும் பெண்களுக்கு ஹெபடைடிஸ் தாக்கும் அபத்து அதிகமுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வயதான தோற்றம் : தினமும் 20 அவுன்ஸ் சோடா பருகினால் நம்முடைய தோற்றத்தில் 4 வயது அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் குளிர்பானத்தில் உள்ள அதிகப்படியான கலோரிகள் நிறைந்துள்ளது.
இதய நலன் : அளவுக்கு அதிகமாக சோடா பானம் பருகுவதால் உடலில் செரம் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் குறைத்துடிப்பு (arrhythmia) போன்ற இதய சம்மந்தமான பிரச்சனைகள் வரும் ஆபத்துள்ளது.
கீல்வாதம் : தினமும் சோடா குடிக்கும் பெண்களுக்கு கீல்வாதம் தாக்கும் அபாயம் அதிகமுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாம் குடிக்கும் சோடா அல்லது குளிர்பானத்தில் பாஸ்பாரிக் ஆசிட் சேர்க்கப்படுகிறது. இது நமது எலும்பில் உள்ள கால்சியம் சத்தை குறைத்துவிடுவதால் ஆண்களை விட பெண்களுக்கு கீல்வாதம் அதிகமாக வருகிறது.