ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் சொன்ன காரணம்!
பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுவது போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் தற்போது 3,500 பேருந்துகள் இருக்கும் நிலையில், அதை 8000 பேருந்துகளாக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து வழங்கப்படுவது போல சென்னையில், ஆண்கள் அனைவருக்கும் இலவச பேருந்துகள் இயக்க வேண்டும். பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவு படுத்த வேண்டும். அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு நான்காயிரம் பேர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.