ஒரு முறை மட்டன் குருமாவை இப்படி செய்து பாருங்கள்… சுவை அள்ளும்.!
கறிக்குழம்பு, பிரியாணி, குருமா, சுக்கா, வறுவல் என மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதிலும் மட்டன் வைத்து தயாரிக்கப்படும் குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், புலாவ், சாதம், ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
மட்டன் குருமாவை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
மட்டன் – 400 கிராம்
எண்ணெய் – 200 மில்லி
பெரிய வெங்காயம் – 2 நறுக்கிய
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
இலவங்கப்பட்டை – 1
பச்சை ஏலக்காய் – 3 – 4
கருப்பு ஏலக்காய் – 1
கிராம்பு – 3 – 4
தயிர் – 200 கிராம்
முந்திரி – 7
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தாழம்பூ எசன்ஸ் – 2 துளி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அடுப்பில் பிரஷர் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக பொன்னிறமாக பொறிந்தவுடன் எடுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே குக்கரில் பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து அதனுடன் ஒரு கப் தயிர் சேர்த்து கிளறிக்கொள்ளுங்கள்.
பிறகு அதில் அலசி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பிறகு அதனுடன் சிகப்பு மிளகாய் தூள், மல்லி தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்றாக மட்டன் வேக மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.
இதற்கிடையே நாம் ஏற்கனவே பொறித்து வைத்துள்ள வெங்காயத்துடன் முந்திரி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் விசில் அடங்கியவுடன் அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம், முந்திரி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
குருமாவில் எண்ணெய் பிரிந்து வரும் தருவாயில் கரம் மசாலா மற்றும் இரண்டு துளி தாழம்பூ எசன்ஸ் சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மட்டன் குருமா தயார்…