Shoulder Pain: ஒரு சைடாக பேக் மாட்டுற ஆள நீங்க.. எவ்வளவு பிரச்சினை வரும் தெரியுமா? – உண்மையை உடைக்கும் டாக்டர்!
தோளில் ஒரு பக்கமாக மட்டும் பை அணிந்து செல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மருத்துவர் கார்த்திகேயன் தன்னுடைய யூடியூப் சேனலில் அண்மையில் பேசினார்.
அதில் அவர் பேசும் போது, “ தோளில் ஒரு பக்கமாக பை அணிந்து செல்வதால் நமக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாம் எடுத்துக் கொண்டு செல்லும் புத்தகப்பையில் இருக்கும் எடையானது, நமது தோள்பட்டைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய இரண்டு கால்கள், இரண்டு கைகள், தலை ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் படியாக படைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை அப்படி இருக்கும் போது, அந்த பேலன்ஸை நாம் என்றுமே தவற விடக்கூடாது.
பையை ஒரு தோள் பட்டையில் மட்டும் எடுத்துச் செல்லும் பொழுது, நமக்கு கீழ் முதுகு வலி, மேல் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
ஆகையால் பையை அணிந்து செல்லும் பொழுது இரண்டு தோள்பட்டைகளிலும் அதன் வார்களை போட்டு செல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வார்களையும் எடுத்து வயிறு முன்னை கட்டிக்கொள்ளுங்கள்.
அப்பொழுது அந்த பையானது உங்களது முதுகை ஒட்டி வந்துவிடும். அப்பொழுது நீங்கள் மிகவும் இலகுவாக உணர்வீர்கள்
அதேபோல அதிக எடை கொண்ட பொருட்களை உங்கள் முதுகை ஒட்டி இருக்கக்கூடிய சிப்பிலும், குறைவான எடையுள்ள பொருட்களை அடுத்தடுத்த சிப்பிலும் வையுங்கள்.
உங்களது பையில் இருக்கும் வார்கள் நல்ல அகலமானவையாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் எடையானது சம நிலையாக உடலில் பரவும்.
நீங்கள் 50 கிலோ எடை இருந்தீர்கள் என்றால் அதில் 10 சதவீதம், அதாவது 5 கிலோ எடை வரை தூக்கலாம். இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு நீண்ட கால பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்” என்று பேசினார்.