10 கிலோமீட்டருக்குள் உங்க ஆபிஸ் இருக்கா? அப்போ உங்களுக்கான பெஸ்ட் பைக் இதுதான்
நீங்கள் தினமும் செல்லும் அலுவலகம் உங்கள் வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள்ளாக இருந்தால் உங்களுக்கான சிறந்த பைக் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல நகரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 103 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று கார் மட்டுமின்றி பைக்கின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைகளுக்கு பைக்கை பயன்படுத்துகின்றனர். தற்போது நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களின் மைலேஜ் வெகுவாக குறைந்துள்ளது.
சாலையில் ஊர்ந்து செல்லும் பைக் குறைந்த மைலேஜ் தருகிறது, இதன் காரணமாக பெட்ரோலுக்கு நாம் செலவிடும் தொகையும் கணிசமாக அதிகரித்திருப்பதை பார்க்கலாம். எனவே, செலவை மிச்சப்படுத்த நீங்கள் நினைத்தால் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பைக்கை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பஜாஜ் ப்ளாட்டினா 100 தான் அதிக லாபம் தரும் பைக்காக இருக்க முடியும்.
உங்கள் அலுவலகம் 10 கிலோ மீட்டருக்குள் இருக்கிறது என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். விடுமுறை நாட்களை கழித்தால் மாதம் நீங்கள் 500 கிலோ மீட்டர் வரை பயணம் செல்லக் கூடும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 103 என கணக்கிட்டாலும், ரூ. 650க்கு பெட்ரோல் ஏற்றினால் போதும். பஜாஜ் ப்ளாட்டினா 100 பைக்கில் மாதம் குறைந்தது 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
பஜாஜ் பிளாட்டினா 100 அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 70-75 கிலோமீட்டர் வரை எளிதாக மைலேஜ் தரும். இப்படிப் பார்த்தால், 1 கிலோமீட்டர் பிளாட்டினா ஓட்டுவதற்கு ஆகும் செலவு 1 ரூபாய் 33 பைசா மட்டுமே. மார்க்கெட்டில் இவ்வளவு குறைந்த விலையில் இயங்கும் வேறு எந்த பைக்கையும் நீங்கள் காண முடியாது.
பிளாட்டினா 100ன் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.67,808 முதல் தொடங்குகிறது. அதேசமயம் இதன் 110 சிசி டிரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ.70,400 ஆகும். இதில் ஏபிஎஸ் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. ஏபிஎஸ் உடன் வரும் பிளாட்டினா 110ஐ ரூ.79,821 எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.