பதிவு செய்யாமல் லிவ் இன் உறவில் இருந்தால் சிறை.. உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் சொல்வதென்ன?
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அதுகுறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆனால், படித்துப் பார்க்கக் கூட நேரம் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, மசோதா மீது விரிவான விவாதம் நடத்திய பின்னர் இன்று நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, நில உரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவை தொடர்பான சட்டங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், மாவட்ட அதிகாரிகளிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவுசெய்யாவிட்டால், அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்பும் 21 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பதிவு செய்ய வேண்டும். மாநிலத்துக்குள் மட்டுமல்லாமல், மாநிலத்துக்கு வெளியே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்பினாலும் பதிவு செய்ய வேண்டும்.
மத வேறுபாடின்றி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து சமூகங்களிலும் உள்ள பெண்களுக்கு திருமண வயது 18-ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான குழந்தை தத்தெடுப்புச் சட்டங்களை உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகன்கள், மகள்கள் என இருதரப்பினருக்கும் தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது. ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் போன்ற இஸ்லாமிய நடைமுறைகளை குற்றம் என உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாகரத்து கோருவதற்கு கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.