பான் கார்டு – ஆதார் இணைப்பு.. ஷாக் கொடுக்கும் அபராத தொகை.. மத்திய அரசு சொன்ன தகவல்!
ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து அரசு இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராத தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
11.48 கோடி எண்ணிலான பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர்கள் இதுவரை பயோமெட்ரிக் ஐடென்டிடியுடன் இணைக்கப்படவில்லை என கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. “விலக்கப்பட்ட பிரிவுகளை தவிர்த்து ஆதார் எண்ணுடன் பான் கார்டை இதுவரை இணைக்காத நபர்களின் எண்ணிக்கை ஜனவரி 29, 2024-ன் படி 11.48 கோடியாக உள்ளது” என லோக் சபாவில் இணை நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
பான் கார்டை பயோமெட்ரிக் ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை வழங்கப்பட்டிருந்தது. ஒருவேளை ஒரு நபர் தனது ஆதார் எண்ணை பான் கார்டுடன் ஜூன் 30, 2023 -க்குள் இணைக்க தவறி, அதன்பிறகு அதனை இணைக்க விரும்பும் பட்சத்தில் அபராத தொகையை செலுத்திய பிறகு செயல்முறையை பூர்த்தி செய்யலாம்.
பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதியான ஜூன் 30, 2023 ஐ தவறவிட்ட நபர்களிடமிருந்து ரூ.1000 அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எவ்வளவு அபராத தொகை இதன் நிமித்தமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பங்கஜ் சௌத்திரி அவர்கள் பதிலளித்த போது “பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்காத நபர்களிடமிருந்து ஜூலை 1, 2023 முதல் ஜனவரி 31, 2024 வரை மொத்தமாக வசூல் செய்யப்பட்ட அபராத தொகை 601.97 கோடி ரூபாயாக உள்ளது” என்று கூறினார்.
ஆதார் எண்ணுடன் தங்களது பான் கார்டை இணைக்காத வரி செலுத்துவோரின் பான் கார்டு ஜூலை 1, 2023 முதல் செயலிழக்கப்படும் என்பதை வருமான வரித் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த பான் கார்டுகள் தொடர்பான எந்த ஒரு ரீஃபண்ட் தொகைகளும் வழங்கப்படாது என்பதையும் வருமான வரித்துறை கூறி இருந்தது. அதுமட்டுமல்லாமல், TDS மற்றும் TCS போன்றவை அதிக விகிதத்தில் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும் 1000 ரூபாய் என்ற அபராத தொகையை செலுத்துவதன் மூலமாக பான் கார்டை மீண்டும் ரீஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் இன்னும் உங்களது ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அபராத தொகையை செலுத்தி ரீ ஆக்டிவேட் செய்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வரி செலுத்துவோர் இதனை உடனடியாக செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் பான் கார்டு மூலமாக எந்த ஒரு ரீஃபண்ட் தொகையையும் நீங்கள் பெற முடியாது. அதோடு உங்களிடமிருந்து அதிக TDS மற்றும் TCS போன்றவை வசூலிக்கப்படும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.