விக்ரம் படத்தை துரத்தும் சிக்கல்.. மீண்டும் தள்ளிப்போகும் தங்கலான் ரிலீஸ் தேதி!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தங்கலான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரத்தப் போர்கள் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது.
2024 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால், ஜனவரி 26 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையாமல் பட வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் இருப்பதாலும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதாலும் படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.