மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் அரசியல் செய்யும் மாநில அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் மாநில அரசுகள் அரசியல் செய்வது பிரிவினைவாத செயல் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், வரும் தேர்தலில் காங்கிரஸ் நாற்பது இடங்களையாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மீது பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது, தனது பேச்சைக் கேட்கக் கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக வந்துள்ளதாகவும், ஆனால் அவர்களால் தனது குரலை அடக்க முடியாது எனவும் ஆவேசமாக கூறினார். மக்களைவையில் பேசியதை போலவே, மாநிலங்களவையில் ராகுல் காந்தியை திறமையற்றவர் என மோடி கிண்டலடித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் உள்ள 50% உச்ச வரம்பு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மோடி, இடஒதுக்கீட்டையே எதிர்த்தவர் முன்னாள் பிரதமர் நேரு என்று தெரிவித்தார். ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்காதவர்கள், அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காதவர்கள் சமூக நீதியை குறித்து பாடம் நடத்துவதாகவும் மோடி விமர்சித்தார்.
மாநில அரசுகளை ஓரிரவில் கலைத்த காங்கிரசுக்கு, ஜனநாயகம் பற்றியோ கூட்டாட்சி பற்றியோ பேச தகுதியில்லை என்றும் பிரதமர் சாடினார்.

பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் தற்போது வீழ்ச்சி அடைந்திருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக அனுதாபமே கொள்வதாக மோடி குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கே எந்த கியாரண்டியும் இல்லாத நிலையில், அவர்கள் தனது கியாரண்டி பற்றி பேசுவதாகவும் மோடி நய்யாண்டியாக குறிப்பிட்டார். மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அது குறித்தும் பிரதமர் பதிலளித்தார்.

எங்கள் வரி, எங்கள் பணம் என்று கூறுவது என்ன மாதிரியான வார்த்தைகள் என கேள்வி எழுப்பிய மோடி, பாஜக அரசு எந்த மாநிலத்தையும் பாரபட்சமாக நடத்தவில்லை என்றார். குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கூறிய கருத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, மாநிலங்கள் ஓரடி எடுத்து வைத்தால் நாடு இரண்டடி எடுத்து வைக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகக் கூறினார். பாஜகவின் மூன்றாவது ஆட்சிக் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற மோடி, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமிடுவோம் என்றார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *