Rishabh Pant: டேவிட் வார்னர் தான் கேப்டன் – உண்மையை உடைத்த டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!
ஒவ்வொரு நாளும் ஐபிஎல் குறித்து அப்டேட் வெளியாக தொடங்கியுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி இந்தியாவில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2024 தொடர் நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. எனினும், இது குறித்து இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. அதோடு, மே 26 ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் டெல்லி கேபிடல்ஸ் அணி குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகிருக்கிறது. கார் விபத்தில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறாத டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தற்போது முழு உடல் தகுதி பெற்று வரும் நிலையில், இந்த சீசனில் அவர் இடம் பெறவில்லை என்றால் கடந்த சீசனைப் போன்று இந்த சீசனிலும் டேவிட் வார்னர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆனால், ரிஷப் பண்ட் இந்த சீசனுக்கு திரும்புவது மட்டுமின்றி முழு சீசனிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஒருவேளை பண்ட் விளையாடவில்லை என்றால் உங்களது அணியின் கேப்டன் யார் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பண்ட் விளையாடவில்லை என்றால் கடந்த சீசனைப் போன்று டேவிட் வார்னர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். பண்ட் ஃபிட்டாக இருப்பதை சமூக வலைதளங்களில் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரால் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய முடியுமா என்பதை இன்னும் 6 வாரங்களில் தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது ரிக்கி பாண்டிங் கூறுவதைப் பார்த்தால் பண்ட் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.