யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும்..!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

அமித்ஷா சொன்னபடி கூட்டணி கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது. ஏன், தி.மு.க. கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம். எத்தனையோ கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை.

கூட்டணிக்கு வருவதும், வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம். எனவே, அமித்ஷா பேசியதை டுவிஸ்ட் செய்ய வேண்டாம். 2024 தேர்தல் களம் வித்தியாசமானது. இதற்கு முன்பு இது போல் தேர்தல் களம் கிடையாது.

2024 தேர்தலில் அனைத்தும் மாறும். கூட்டணியை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் சூழல்படி, கடைசி நேரத்தில் கூட கூட்டணி அமையலாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெளிவான முடிவு கிடைக்கும்.

மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கப் போவதில்லை. மோடி மற்றும் பா.ஜ.க. தலைமையை ஏற்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழகம் ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *