பா.ஜ.க.வுடன் எப்போது கூட்டணி இல்லை… பா.ஜனதாவுக்கான கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது : ஜெயக்குமார்
தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.க. தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு எப்போதுமே பா.ஜ.க. கூட்டணி தேவையில்லை என்பது தொண்டர்களின் கருத்தாகும்.
அந்த தொண்டர்களின் மனநிலையை தான், அண்மையில் சென்னை, எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உலகத்துக்கே அறிவிக்கப்பட்டது.
அந்த நிலையில் இருந்து எப்போதும் மாற்றம் இல்லை. எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. பா.ஜ.க. மத்திய அமைச்சர் அமித் ஷா, அவருடைய கருத்தைக் கூறலாம். ஆனால் பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடாகும்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டு விட்டது. ஓ.பி.எஸ். தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றார். அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. எழுச்சியுடன் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் சில தனிமனிதர்கள் அவருடன் சேர்ந்து ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். அவர் பேசுவதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குழப்பத்தை ஏற்படுத்தவே ஓ.பி.எஸ். பேசி வருகிறார். பிரளயமே ஏற்பட்டாலும் எந்தக் கொம்பனாலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுவிட்டு வந்துள்ளார்.
அந்த நாட்டில் ரூ. 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தங்களை, யார் போட்டது எனத் தெளிவுப்படுத்த வேண்டியது தமிழக அரசாகும். தமிழக அளவில் தி.மு.க. அரசு கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி வஞ்சித்துள்ளது எனக் கருத்து கேட்புக் கூட்டத்தில் எழுச்சி எழுந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தட்டேந்தி, மடிப்பிச்சை கேட்கும் நிலையைத் தான் இந்த தி.மு.க. அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.