நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..!
திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு புதன் கிழமை சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின் . அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கேள்வி: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?
முதல்வர்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.
கேள்வி: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்? முதல்வர்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். என்று பதிலளித்தார்.