தை அமாவாசைக்கு படையல் எப்படி வைக்கனும் தெரியுமா?

அமாவாசை தினம் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையல் வைப்பதுதான். அந்த வகையில் அமாவாசை தினத்தில் எப்படி பூஜை செய்து படையல் வைப்பது, அதற்கு என்னென்ன தேவை என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான். அதில் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததிற்கு சமம் என்பது நம்பிக்கை.

படையல் வைப்பது எப்படி?

1. மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.

2. சிறு தட்டில் மறைந்தவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.

3. 2 குத்து விளக்குகள் வைத்து ஒரு முகம் ஏற்றவும். மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் படையல் வைக்க வேண்டும்.

4. தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழையிலை படையல் போடவும்.

5. ஒட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்வது நல்லது.

6. கோதுமை, தவிடு 2 கிலோ, அகத்திகீரை, வெல்லம், வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து அமாவாசை அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.

7. முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து படையலாக்கலாம். அதேபோல், நம் குடும்ப வழக்கத்தின்படியும் உணவை வைத்துப் படையல் போடலாம்.

8. இப்படி முன்னோர்களுக்குப் படையலிடும் போது, குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து இருந்து, பூஜிக்க வேண்டும். இயலாத பட்சத்தில், கணவனும் மனைவியுமாக சேர்ந்து இந்தப் படையலைப் போடலாம்.

9. எதை மறந்தாலும் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டை மட்டும் மறக்கவே கூடாது. பிப்ரவரி 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2024 நாளை, தை அமாவாசை. இந்தநாளில், முன்னோரை வணங்குவோம். வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்வோம்.

10. பசுவுக்கு அகத்திக்கீரையும் காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்க வேண்டும்.

11. படையல் இலையில் முக்கியமாக பச்சரியால் செய்யப்பட்ட சாதத்தில், புதிதாக வாங்கப்பட்ட தயிர் கலக்கி வைக்கவும்.

12. அதில் வெங்காயம் போடப்படாத வாழைக்காயால் செய்யப்பட்ட ஒரு உணவு சமைத்து வைக்க வேண்டும்..

13. துளசி இலையை வைத்து அதனுடன் அச்சு வெல்லம் சேர்க்க வேண்டும். இதில் நெய் சிறிதளவு இடவும்.

14. வாழைப் பழங்களை பூஜைக்கு வைக்கும் போது கிள்ளி விட்டு வைக்கவும்.

15. வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் தேங்காய் உடைக்க வேண்டாம்.

16. படையலிட்ட பின்னர் சுவாமிக்கும், படையலிட்ட உணவுகளுக்கும் பூஜை செய்து முன்னோர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

17. பின்னர் காகத்திற்கு உணவை வைக்க வேண்டும்.

18. காகம் சாப்பிட்ட பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

19. மிக முக்கியமாக தை அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும்.

20. அன்னதானம் செய்ய முடியாதவர்கள் ஏழை எளிய மக்களுக்கு முடிந்த வரை உதவி செய்ய வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *