ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்! தொடர்ந்து 6வது முறையாக மாற்றம் இல்லை!

வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது.

நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி 2024 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணிப்பை மாற்றாமல் 7 சதவீதமாக வைத்துள்ளது. 2023-24ஆம் ஆண்டிற்கான பணவீக்க மதிப்பீட்டையும் மாற்றாமல் 5.4 சதவீதமாக வைத்திருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “பணவீக்கம் கீழ்நோக்கிய பாதையில் உள்ளது. ஆர்பிஐயின் பல்நோக்கு கொள்கைகள் நிதி அமைப்பை நிலையாக வைத்திருப்பதில் நன்றாக வேலை செய்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலும் நடந்துகொண்டிருக்கும் போர்கள் மற்றும் செங்கடலில் ஹவுதி தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன என்றும் ஆர்பிஐ ஆளுநர் கூறினார்.

இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், “நமது பொருளாதாரம் தொடர்ந்து 3வது ஆண்டாக 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்துள்ளது. 2024ஆம் நிதி ஆண்டில் இருந்த வேகம் 2025ஆம் நிதி ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து முடிவு எடுக்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தொடர்ச்சியாக 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருந்தது. அதனால் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்ந்தது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்திலும் ஏற்கெனவே உள்ள வட்டிவிகிதமே தொடரும் என்று தீர்மானித்துள்ளது.

பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீத வரம்பை ஒட்டியே இருப்பதால் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருவதாலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *