ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு.. கடுப்பான இஷான் கிஷன்.. விலகலுக்கு காரணமே ராகுல் டிராவிட் தான்!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கியதால், இஷான் கிஷன் கோபத்தில் பாதியுடன் கிளம்பியது தெரிய வந்துள்ளது.
அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. சில மாதங்களில் டி20 உலகக்கோப்பை நெருங்குவதால், டி20 தொடர் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரில் 3 போட்டிகளிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாமல், இளம் வீரரான ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
மிடில் ஆர்டரில் ஜித்தேஷ் சர்மா விளையாடுவதால் டாப் ஆர்டரில் யஷஸ்வி கெய்ஸ்வாலை கொண்டு வர முடிந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி மேற்கொண்டாலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே பல்வேறு முடிவுகளை எடுத்தார். இதனால் ராகுல் டிராவிட்டின் முடிவு இஷான் கிஷனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியது.
டி20 தொடரின் போதே பொறுத்து பார்த்த இஷான் கிஷன், டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்று கடுப்பாகியுள்ளார். இதன் காரணமாகவே மன சோர்வு என்று கூறி விடுப்பு கோரியதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்தும் இஷான் கிஷனுக்கு முழுமையாக எந்த தொடரிலும் விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீதான அதிருப்தி காரணமாகவே இஷான் கிஷன் நாடு திரும்பி இருக்கிறார். அதன்பின் ரஞ்சி டிராபி போட்டிகளிலும் பங்கேற்காததற்கும் இதுதான் காரணம் என்று பார்க்கப்படுகிறது. இதன்பின் இஷான் கிஷன் மனநிலையை அறிந்து ராகுல் டிராவிட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நேரடி விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தான் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் இஷான் கிஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளி வந்துள்ளது. ஆனாலும் இஷான் கிஷன் டெஸ்ட் தொடரை விளையாட விரும்பாததால், எதிர் வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.