PayTM-ஐ வறுத்தெடுக்கும் ஆர்பிஐ.. பேடிஎம் பங்கு விலை 9 சதவீதம் சரிவு..!!
இந்தியாவின் மிகப்பெரிய நிதியியல் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம் முறைகேடாகப் பல லட்சம் கணக்குகளில் விதிகளை மீறி பணத்தை அனுப்பியுள்ளது மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
பேடிஎம் நிறுவனர் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஆர்பிஐ அலுவலகம், நிதியமைச்சக அலுவலகத்தைத் தட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை ஆர்பிஐ உயர் அதிகாரிகள் சந்தித்தனர். இக்கூட்டத்தில் பேடிஎம் மீதான ஆர்பிஐ நடவடிக்கை முக்கிய விவாத பொருளாக மாறியது.
ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை நடவடிக்கைகள், நிறுவனங்களின் செயல்பாடுகளில் எப்போதும் இருக்கும் என்று ஆர்பிஐ துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் கூறினார். இருப்பினும், “தனிப்பட்ட நிறுவனங்களைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து பேடிஎம்-க்கு முன்பே எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப் போதுமான நேரத்தை விட அதிகமாகக் கொடுத்துள்ளதாகவும். இதன் பின்பும் பேடிஎம் கடைப்பிடிக்காத காரணத்தால் Paytm-ல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் கூறினார்.
பேடிஎம் நிறுவனத்தால் தற்போது இந்தியாவின் நிதி அமைப்பைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று சக்திகாந்த தாஸ் கூறினார். மேலும் அவர் பேசுகையில் கடந்த சில வருடங்களாக ஆர்பிஐ தனது கண்காணிப்பு முறை மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.
இந்தக் கட்டமைப்பின் கீழ் ஒழுங்குமுறை ஆணையமாக இருக்கும் ஆர்பிஐ அனைத்து நிறுவனங்களுக்கும் சரியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு, போதுமான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஒழுங்குமுறை ஆணையமாக இருதரப்பு ஒத்துழைப்பு என்பது முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.
எங்களின் அறிவுரைகளை எற்று குறித்த காலத்திற்குள் செயல்படாத போது தான் நிறுவனங்களை முடக்குவதோ அல்லது செயல்பாடுகளை முடக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். எங்களுடைய செயல்பாடு அனைத்தும் நாட்டின் நிதியியல் கட்டமைப்பை மேம்படுத்தப்பட்ட முறையில் நிர்வாகம் செய்வதே என ஆர்பிஐ துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்தார்.
ஆர்பிஐ செய்தியாளர்கள் கூட்டம் துவங்கும் போது 8.5 சதவீத சரிவில் இருந்த பேடிஎம் பங்குகள், கூட்டம் முடிவில் 9.99 சதவீதம் என்ற லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டது.