விருது விழாவில் இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்
51 வது சட்டர்ன் விருது விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 12 பரிந்துரைகளுடனும், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் 11 பரிந்துரைகளுடனும் பரிந்துரைப் பட்டியலில் முன்னிலையில் இருந்தன.
இதில் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் என நான்கு விருதுகளைப் பெற்றது. விருது விழாவில் ஜேம்ஸ் கேமரூன் பேசிய போது, அவரிடம் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது.
140 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியா ஹாலிவுட் படங்களின் முக்கிய சந்தையாகப் பார்க்கப்படுவதால், ஹாலிவுட்டில் தயாராகும் படங்களில் இந்தியா மற்றும் இந்தியர் குறித்த குறிப்புகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் இந்திய திரைநட்சத்திரங்களுடன் நெருக்கத்தை பகிர்ந்து வருகிறார்கள். சென்ற வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட் விழாவில் ராஜமௌலியை சந்தித்த ஜேம்ஸ் கேமரூன், அவரது ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டிப் பேசினார். அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது.
இதனடிப்படையில், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் குறித்து சட்டர்ன் விருது விழாவில் ஜேம்ஸ் கேமரூனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
2022 ல் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1200 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.