முதல் படத்திற்கு இவ்வளவு சம்பளமா… ஆனந்த அதிர்ச்சிக்குள்ளான எம்ஜிஆர்!
எம்ஜி ராமச்சந்திரனும், அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணியும் முப்பதுகளின் ஆரம்பத்தில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார்கள். சினிமா மக்களின் முழுநேர கேளிக்கையாக மாறாத ஆரம்ப காலகட்டம். நாடகங்களே மக்களின் பிரதான பொழுதுப்போக்காக இருந்தது. தினசரி நாடகங்கள் நடத்தப்படும் என்பதால் நாடகக் கம்பெனிகள் நடிகர்களை மாதச் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். ஒரு கம்பெனியில் மாதச்சம்பளம் பெறுவது கௌரவம். ஒரு மாதத்தை பட்டினியில்லாமல் நகர்த்திவிட முடியும்.
நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த கம்பெனிகள் மெதுவாக சினிமா தயாரிப்பில் இறங்கின. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியும் தங்களின் பிரபலமான பதிபக்தி நாடகத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியது. கம்பெனி படம் எடுக்க ஆரம்பித்தால் நாடகங்கள் நடக்காது, மாதச் சம்பளம் கட்டாகும் என சகோதரர்கள் இருவருக்கும் கலக்கம். அதேநேரம், கம்பெனி எடுக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காதா என்ற நப்பாசை. சினிமா என்றால் எப்போதாவதுதான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த ஒருநாள் இரண்டு நாள் சம்பளத்தை வைத்து எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்ற அச்சம். இப்படி சகோதரர்கள் இருவரும் குழப்பமான மனநிலையில் இருக்கையில் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார் (இவர் நடிகர் எம்.கே.ராதாவின் தந்தை) எம்ஜி ராமச்சந்திரனையும், அவரது அண்ணனையும் சந்திக்கிறார். அவர் மூலமாக எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதிலீலாவதி என்ற படம் எடுக்கயிருப்பது சகோதரர்களுக்கு தெரிய வருகிறது. அதில் துப்பறிவாளன் வேடம் ஒன்று உள்ளது. சண்டையெல்லாம் உண்டு. உனக்கு சரி என்றால், நானே பேசுகிறேன் என்கிறார் எம்.கந்தசாமி. எம்ஜி ராமச்சந்திரனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் இருக்கிறது.
எம்.கந்தசாமி சொன்னது போல், சதிலீலாவதியை தயாரித்த கோவையைச் சேர்ந்த மருதாசலம் செட்டியாரிடம் எம்ஜி ராமச்சந்திரனை அறிமுகப்படுத்தி வைத்தார். உடன் அவரது அண்ணனும் சென்றிருந்தார். அந்த சம்பவத்தை தான் பொறுப்பாசிரியராக இருந்த சமநீதி இதழில், பதவிப்போராட்டம் என்ற கட்டுரையில் எம்ஜி ராமச்சந்திரன் விவரித்திருந்தார். 1966 ல் அந்த கட்டுரை வெளிவந்தது. அதில் எம்ஜி ராமச்சந்திரன் எழுதியதை அப்படியே தருகிறோம்.
“ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார். கோவையைச் சேர்ந்தவர். நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார். பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சற்றைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர், ‘உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்’ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டைகூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?”
சதிலீலாவதியில் எம்ஜி ராமச்சந்திரன் போலீஸ் அதிகாரியாக நடித்தார். கையூட்டு பெறும் எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரம். அந்த வேடத்தை அவருக்கு வாங்கித் தந்த எம்.கந்தசாமியின் மகன் எம்.கே.ராதா சதிலீலாவதியில் நாயகனாக நடித்தார். டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் அதுதான் முதல் படம். என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதல் படம். ஆனால், அவர் இரண்டாவதாக நடித்த படம் முந்திக் கொண்டு வெளியாகி, சதிலீலாவதியை அவரது இரண்டாவது படமாக்கியது.
1936 இல் சதிலீலாவதி வெளிவந்த போது 100 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அன்றைய உதிரி நாடக நடிகர்கள் கனவுகாண முடியாதது. அதனை எம்ஜி ராமச்சந்திரனே தனது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். சினிமாவில் முதன்முதலில் சம்பளமாக அவர் பெற்ற முன் பணம் 100 ரூபாய் அவருக்கு அளித்த அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் படிக்கையில் 100 ரூபாயின் மதிப்பு அன்று எத்தகையதாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.