வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு கண்டனம்.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பி.கள் போராட்டம்
தமிழ்நாட்டிற்கு புயல், வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பி.கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் பேய்மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப் பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களைச் சரிசெய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்கும்படி தமிழக அரசு கேட்டிருந்தது.
இந்த சூழலில் மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக மக்களவையில் விவாதித்த திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக டி.ஆர்.பாலு அறிவித்து இருந்தார்.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி-களும் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை புறக்கணிப்போம், தமிழகத்தை வஞ்சிக்காதே என்று கோஷங்களை எழுப்பி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.