இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்ரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்..!
உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகளை கொண்டுவரும் வகையில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் நான்கு நாள் சிறப்புக் கூட்டம், செவ்வாய்க்கிழமை(பிப்.6) தொடங்கியது.
இந்த மசோதாவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும் என்று தெரிவித்தார்.
முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாகுபாடு அகற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்களின் ஜெய் ஸ்ரீராம் முழுக்கத்துக்கு மத்தியில் மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் உருவெடுத்துள்ளது.