ஐரோப்பிய நாடொன்றின் பிரபலமான இந்த அரிசி காணாமல் போகலாம்: கோபத்தில் வேளாண் மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் காரணமாக ஸ்பெயின் மக்கள் பரவலாக பயன்படுத்தும் அரிசி வகை ஒன்று காணாமல் போகலாம் என்ற அச்சத்தை வேளாண் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
வேளாண் மக்கள் கவலை
ஸ்பெயின் மக்கள் paella என்ற உணவைத் தயாரிக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிற அரிசி வகை ஒன்று தற்போது பூஞ்சைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேளாண் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேளாண் மக்கள் நம்பியிருக்கும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
Arroz bomba என அறியப்படும் அந்த அரிசி வகையானது ஸ்பெயின் நாட்டில் மட்டுமே பெருமளவில் விளைகிறது. வலென்சியா பிராந்தியத்தில் உள்ள மூன்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில், பூஞ்சை பாதிப்பால் 2023ல் 10 ஆண்டு சராசரி அறுவடையில் பாதியாக சரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மூன்றாண்டுகளில் விலை இரு மடங்கு
இதே நிலை நீடிக்கும் என்றால் Arroz bomba அரிசி காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம் என்றே வேளாண் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளான பிரேசில், இந்தியா மற்றும் கம்போடியா ஆகியவை தங்கள் சொந்த பயிர்களைப் பாதுகாக்க பூச்சிக்கொல்லியை பரவலாகப் பயன்படுத்துகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து ஐரோப்பா முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். மேலும், இந்த வாரம் ஸ்பெயின் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, Arroz bomba அரிசி உற்பத்தி குறைந்ததால், மூன்றாண்டுகளில் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு 5 யூரோவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.