மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்..!
2024 மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிபெற்று சாதனை படைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக முடிசூடவும் ஆயத்தமாகி வருகிறார். பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த கூட்டணி இப்போதுவரை தத்தளிப்பில்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’ பலமாக உள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, கொமதேக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் உள்ளன. தற்போது திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவும் தமிழகத்தில் பலமான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண உள்ளது. இதனால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி தமிழகத்தில் உள்ளது.
இந்த சூழலில் மக்களவை தேர்தல் தொடர்பாக ‘Mood Of the Nation 2024’ என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’ தான் வெல்லும் என இந்த சர்வே தெரிவித்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தேனி தவிர 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை ஒப்பிடும்போது இந்த முறை திமுக கூட்டணி என்பது அனைத்து தொகுதிகளிலும் வென்று அசத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கும், அண்ணாமலை தலைமயிலான பாஜகவுக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள் அதிமுக மற்றும் பாஜகவுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உற்சாகத்தில் உள்ளன.