லால் சலாம் படத்தின் ஓபனிங் எப்படி இருக்கும்? தெலுங்கு வட்டாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
வெளியாகவுள்ள ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் ஓபனிங் குறித்து தெலுங்கு வட்டாரத்தில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஐஸ்வர்யா முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக லால் சலாம் படத்தின் பணிகள் நடந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் படக்குழுவினர் மேற்கொண்ட புரொமோஷன்களால் படத்தின் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
இருப்பினும், பிற மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் படக்குழுவினர் போதிய புரொமோஷன்களை செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலருக்கும் இப்படியொரு படம் வெளியாகுவதே தெரியாது என்று தெலுங்கு ஊடகங்கள் கூறியுள்ளன.
மேலும், ரஜினி நடித்திருப்பதால் படத்திற்கு அதிக விளம்பரம் தேவை இருக்காது என்ற நிலைமை இருக்கும்போது, லால் சலாம் படத்தில் ரஜினி நடித்திருக்கிறாரா என்பதே தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு தெரியாமல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளை லால் சலாம் சோலோவாக ரிலீஸ் ஆகுவதால் படத்திற்கு பாசிடிவான விஷயங்கள் உள்ளன. படம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால், வசூல் ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.