”ஏலியனோடு மூன்று மாதங்கள் வசித்தேன்” அதிர்ச்சியை கிளப்பும் அமெரிக்க ராணுவ பைலட்
தான் சிறுவனாக இருக்கும் போது 92 நாட்கள் ஏலியனோடு வசித்ததாகவும் அவர்களுடைய பறக்கும் தட்டில் (UFO) பயணம் செய்ததாகவும், அதன்பின்னர் 1980-களில் மீண்டும் ஒருமுறை Andromedians என்ற ஏலியன் இனம் தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமெரிக்க ராணுவ பைலட் அலெக்ஸ் கோலியர். 1960-களில் தனது தாத்தா வீட்டிலுள்ள சோளத் தோட்டத்தில் மற்ற சிறுவர்களோடு திருடன் – போலீஸ் விளையாடும் போது, முதன் முதலாக Andromedian என்ற ஏலியனை பார்த்ததாக கூறுகிறார் அலெக்ஸ் கோலியர். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தூங்கி எழுந்து பார்த்தபோது விண்கலத்தில் இருந்தேன்.
அங்கு Vissaeus மற்றும் Moroanay என்ற இரண்டு ஏலியன்களை சந்தித்தேன். இந்த சந்திப்பு அசாதாரணமான ஒன்றாக இருந்ததாகவும், அவர்களுடைய விண்கலத்தில் இருக்கும் போது எனக்கு விசேஷமான பெல்ட்டை அணிவித்தார்கள். அதன் வழியாகத்தான் நான் தங்கியிருந்த மூன்று மாதங்களும் என்னோடு ஏலியன்கள் தொடர்பு கொண்டார்கள் என நினைவுகூர்கிறார் கோலியர்.
என்னை அவர்கள் அன்போடு நடத்தியதாகவும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறுகளை தனக்கு சொல்லிக் கொடுத்ததாகவும் கூறும் கோலியர், நான் அங்கிருந்த மூன்று மாதங்களில் பல கிரகங்களுக்கு பயணம் செய்தேன் என்றும் திடீரென்று ஒருநாள் யாருக்கும் தெரியாமல் என்னுடைய தாத்தா வீட்டிற்கு திரும்பி வந்ததாகவும் கூறுகிறார். நம்முடைய அறிவியல் 100 பில்லியன் கேலக்ஸி இருப்பதாக கூறுகிறது.
ஆனால் நாம் ஒரே பரிணாமத்தில் தான் பார்க்கிறோம். ஆனால் ஏலியன்களோ இந்தப் பிரபஞ்சத்தில் 100 ட்ரில்லியன் கேலக்ஸிகள் இருப்பதாக கூறுகிறது. ஒவ்வொரு கேலக்ஸியிலும் உயிரினமும் பண்டைய நாகரீகமும் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. இதில் மனிதர்கள் மட்டும் தனியாக வாழவில்லை. பல ஏலியன் இனங்களும் இங்கு வசிக்கின்றன. அதில் சில நல்ல ஏலியனாகவும் மற்றவை தீய ஏலியனாகவும் இருக்கின்றன. மனிதர்கள் இப்போதுதான் விண்வெளி பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்றும் பிரபஞ்சத்தை அவர்கள் ஆராய ஆராய, இடிபாடுகளையே அதிகமாக பார்ப்பார்கள் என்றும் ஏலியன் தன்னிடம் கூறியதாக சொல்கிறார் கோலியர்.
பின்னர் 1980-களில் மறுபடியும் ஏலியன்களை கனவுகளின் மூலம் சந்தித்ததாகவும், அப்போது அவர்கள் நாங்கள்தான் உன்னுடைய மூதாதையர்கள் என்றும் கூடிய விரைவில் மனிதயினம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கப் போவதாகவும் கூறி என்னை எச்சரிக்கை செய்தார்கள் என கோலியர் கூறுகிறார். நான் கூறும் அனைத்திற்கும் என்னிடம் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆனால் அதை இன்னும் பொதுவெளியில் காண்பிக்கவில்லை என்று கூறும் இந்த முன்னாள் ராணுவ பைலட், என்னுடைய குரலை ஒடுக்குவதற்காக அரசாங்கமும் சில குழுக்களும் என்னை தொடர்ந்து அச்சுறுத்துகிறார்கள் எனக் கூறுகிறார்.
ஆனால் இவ்வுளவு தொல்லைகளுக்குப் பிறகும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மனித சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்யவும் தனது கதையை அனைவரிடமும் பகிர்ந்து வருவதாக சொல்கிறார் கோலியர். ஆனால் கோலியரின் இந்த கதையை இணையவாசிகள் பலரும் கிண்டல் செய்துள்ளனர். ஏலியன் குறித்து வழக்கமாக கிளப்பப்படும் கதைதான் இது என பதிவிட்டுள்ளனர்.