அவ்வளவு கஷ்டம்.. விருது வென்ற பனிக்கரடி போட்டோக்கு பின்னால் இத்தனை சிரமமா?
பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் சிறந்த வனவிலங்கு புகைப்படமாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வனவிலங்கு புகைப்படத்திற்கான விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலக அளவில் சுமார் 90 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற அனைவரும் தாங்கள் எடுத்த மிகச் சிறந்த வனவிலங்கு புகைப்படங்களை சமர்பித்தனர். அவற்றில் இருந்து சிறந்த 25 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் நிமா சரிகானி எடுத்துள்ளார்.
“அடர்ந்த மூடுபனியில் துருவக் கரடிகளைத் தேடி 3 நாட்கள் செலவிட்டேன். அதன்படி பனி அதிகம் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு சிறிய மற்றும் பெரிய கரசிகளை பார்த்தேன். சுமார் 8 மணி நேரம் காத்திருந்தோம். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த இள வயது கரடி சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களை பயன்படுத்தி ஒரு சமமான படுக்கையை உருவாக்கியது. அதனி படமாக எடுத்தேன்” என்று நிமா தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் இயற்கையின் அழகையும், அச்சுறுத்தளையும் ஒருசேர வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் தூங்க இடமில்லாமல் உருகும் பனிப்பாறையின் மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் சுற்றுசூழல் மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் அவசியத்தை எடுத்துறைக்கும் விதமாக அமைந்துள்ளது.