ஜனவரியில் மட்டும் இத்தனை கோடி யுபிஐ பணப் பரிவர்த்தனையா..? என்பிசிஐ வெளியிட்ட தகவல்!
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு உதவியாக இருப்பது யுபிஐ சேவை. பணப் பரிமாற்றம் இவ்வளவு எளிதாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு யுபிஐ மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு குண்டூசி வாங்கினாலும் சரி. 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் சரி! அனைத்திற்கு யுபிஐ பரிவர்த்தனையே முதன்மையாகத் திகழ்கிறது.
அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது வெளியான தகவல்கள் உள்ளன. இந்த தகவல்களை யுபிஐ பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) எனப்படும் என்பிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.18.41 லட்சம் கோடியை (ரூ.18.41 டிரில்லியன்) எட்டியுள்ளதாக என்பிசிஐ குறிப்பிட்டுள்ளது. இதுவே 2023 டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ.18.23 லட்சம் கோடியை விட ஒரு மடங்கு அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,400 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே, கடந்த அக்டோபர் மாதத்தின் 1220 கோடி பரிவர்த்தனைகளை ஒப்பிடுகையில் 1.5 விழுக்காடு அதிகமாகும். நவம்பர் 2023 காலத்தில், மொத்தம் 1,140 கோடி பரிவர்த்தனைகளை வாயிலாக ரூ.17.4 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. என்பிசிஐ வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 2024 உடன் கடந்த வருடம் இதே மாதத்தை ஒப்பிடுகையில் யுபிஐ பரிவர்த்தனை 52 விழுக்காடும், பணப் பரிவர்த்தனையின் மதிப்பு 42 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2023 டிசம்பர் மாதத்தில் ரூ.5.7 லட்சம் கோடியாக இருந்த உடனடி கட்டணச் சேவை (ஐஎம்பிஎஸ்) பரிவர்த்தனை மதிப்பு ஜனவரி மாதத்தில் 0.7 விழுக்காடு குறைந்து ரூ.5.66 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோல. ஜனவரி மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) பரிவர்த்தனைகள் 5 விழுக்காடு குறைந்துள்ளன. டிசம்பரில் 348 மில்லியனில் இருந்து ஜனவரியில் 331 மில்லியனாக இது குறைந்துள்ளது.
ஜனவரியில் FASTag பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.5,560 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே டிசம்பரில் ரூ.5,861 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023 உடன் ஒப்பிடும்போது ஜனவரி 2024-ல் ஃபாஸ்டேக் 10 விழுக்காடு வளர்ச்சியையும், பரிவர்த்தனை மதிப்பில் 16 விழுக்காடு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
டிசம்பரில் ரூ.25,162 கோடியாக இருந்த ஏஇபிஎஸ் எனப்படும் ஆதார் ஏனேபிள்ட் பேமென்ட் சிஸ்டம் (AePS) வாயிலாக நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள் ஜனவரி மாதத்தில் 8 விழுக்காடு குறைந்தது ரூ.23,057 கோடியாக இருந்தது. இதுவே கடந்த வரும் நவம்பர் மாதத்தில், ரூ.29,640 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.