வரும் ஐபிஎல் சீசனில் தோனிக்கும்,பிளமிங்கிற்கும் பல பிரச்சினைகள் இருக்கு… சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒன்றரை மாதமே எஞ்சி இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சர்துல் தாக்கூர், டாரல் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சாகர் வரும் ஐபிஎல் தொடரில் தன்னை நீங்கள் புதிய வீரர்களாக பார்ப்பீர்கள் என்று கூறினார்.

இது குறித்து பேசிய அவர், காயத்திலிருந்து குணமடையும் பயணத்தில் ஈடுபடும் போது சில நல்ல விஷயங்களும் நடக்கும். ஒரு விளையாட்டு வீரருக்கு இந்த நேரத்தில் தான் பலம் மற்றும் பல விஷயங்கள் குறித்து தெளிவு வரும். ஒரு பவுலராக எனக்கு பலம் அதிகரித்தால் என்னுடைய பந்துவீச்சின் வேகமும் அதிகரிக்கும். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் எல்லாம் நான் 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து வீசி கொண்டு வந்தேன்.

ஆனால் அதன் பிறகு என்னுடைய வேகம் குறைந்தது தற்போது என்னுடைய பலத்தை அதிகரிக்கும். பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் எனவே என்னுடைய வேகத்தை அதிகரிக்க இதுதான் சரியான நேரம். மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல புதிய திறமைகளை வளர்த்து வருகிறேன். நான் பேட்டிங் வரிசையில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் இறங்குவதால் வெறும் மூன்று அல்லது நான்கு பந்துகள் தான் எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அந்த நான்கு பந்துகளில் எப்படி ஆடினால் ரன் கிடைக்கும் என்பது குறித்து விதவிதமான ஷாட்களை ஆடி பயிற்சி செய்து வருகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் எங்களுடைய அணி பலமானதாகவே இருக்கிறது. நடந்து முடிந்த மினி ஏலத்திலும் எங்கள் அணி சிறந்த வீரர்களை வாங்கி இருக்கிறார்கள். எங்களுடைய அணியின் பயிற்சியாளர் பிளமிங்கிற்கும் தோனிக்கும் நடப்பு சீசன் பிரச்சினையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் பல திறமையான வீரர்கள் இருப்பதால் யாரை அணியில் சேர்ப்பது, எந்த காம்பினேஷனில் களமிறங்குவது என்பது குறித்து தேர்வு செய்வதில் மிகவும் சவாலாக அவர்களுக்கு இருக்கும். என்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் கிரிக்கெட் போட்டியை விட்டு விலகினேன். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு தெரியாது.

தற்போது அதிலிருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன். தற்போது என் மனதில் ஓடுவதெல்லாம் நான் மீண்டும் விளையாடும்போது ரசிகர்கள் இவர் கிரிக்கெட்டில் நல்ல முன்னேறி இருக்கிறார் என்று பாராட்ட வேண்டும். எங்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பிராவோ இருக்கிறார். பழைய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுக்கிறார்.

எங்கள் அணியில் உள்ள பவுலர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை கூறி வருகிறார். பேட்ஸ்மேன்கள் எப்படி யோசிப்பார்கள் என்பது குறித்து பிராவோவுக்கு நன்றாக தெரியும். இதனால் அவர் இருப்பது எங்கள் அணியில் உள்ள இளைஞர்களுக்கு பலமாக இருக்கிறது என்று தீபக்சாகர் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *