சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஓவர்களை குறைக்க வேண்டும்.. பலன் அளிக்குமா முன்னாள் ஆஸி கேப்டன் யோசனை?
சர்வதேச கிரிக்கெட் போட்டி பல மாற்றங்களை அண்மை காலமாக சந்தித்து வருகிறது. டி20 கிரிக்கெட் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட் அழியும் என அனைவருமே பயந்தனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது தான்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தான் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஒருநாள் கிரிக்கெட் தற்போது ரசிகர்களுக்கு சோர்வடைய வைப்பதாகவும், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் அரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓவர்களை குறைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ஒரு நாள் கிரிக்கெட் தற்போது நீண்ட நேரம் நடைபெற்று வருகிறது. இதனை குறைக்கும் விதமாக 50 ஓவர்கள் இருந்து போட்டியை 40 ஓவராக மாற்ற வேண்டும். இங்கிலாந்தில் இதனை சோதனை முயற்சியாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அங்கு நடைபெறும் புரோ40 கிரிக்கெட் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை சர்வதேச கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும். மேலும் இரண்டு முனையில் புதிய பந்துகளை பயன்படுத்துவதை ஒழிக்க வேண்டும் என்று பல யோசனைகளை ஆரோன் பிஞ்ச் வழங்கி இருக்கிறார்.இந்த யோசனையை ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள். 40 ஓவர்கள் ஆக போட்டியை குறைப்பது மூலம் பலம் குன்றிய அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் தற்போது 50 ஓவர் போட்டிகளில் நடுப்பகுதியில் ஆட்டம் தோய்வடைகிறது. இதனை சரிகட்ட 10 ஓவர்கள் குறைக்க பட்டால் அந்த இடத்திலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும். ஏற்கனவே 60 ஓவரில் இருந்து தான் தற்போது 50 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் 10 ஓவர்கள் குறைக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.