நம் நாட்டை இரண்டாக பிரிக்க பார்க்கிறது காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது. டஜன் கணக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்த கட்சி தான் இந்தக் கட்சி. இதே காங்கிரஸ் கட்சி தான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை, மக்களவையின் மாண்பை ஜெயிலுக்கு தள்ளி பூட்டியவர்கள். இதே காங்கிரஸ் கட்சி தான் நாட்டை துண்டாடவும் பல பணிகளைச் செய்தது. இப்போது வடக்கு இந்தியா, தென் இந்தியா என பிரிப்பதற்கான பேச்சுக்களை பேசிவருகிறது.

இந்த காங்கிரஸ் இன்று நமக்கு பாடம் எடுக்கிறது. இந்த காங்கிரஸ் அரசு பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தன்னுடைய பயனுக்காகப் பயன்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நக்சல்வாதம் என்பது பெரும் வெற்றி பெற்றது. உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு பற்றி பாடம் எடுக்கிறது. தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டுமா? அல்லது விவசாயி வளர்ச்சி அடையவேண்டுமா? என்ற தன்னுடைய குழப்பத்திலேயே காலத்தை காங்கிரஸ் கடத்திவிட்டது.

10 ஆண்டுகளில் 12-வது இடத்தில் இருந்த பொருளாதார நிலையை 11-வது இடத்திற்கு நாங்கள் எடுத்துவந்தோம். 11- ல் இருந்து 10 வருவது மிகப்பெரிய செயல் அல்ல. இந்த காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கை பற்றி மிகப் பெரிய பேச்சுகளை எல்லாம் பேசினார்கள். இவர்கள் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு முயற்சி செய்யவில்லை. ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு தர முயற்சி செய்யவில்லை. பாபா சாகேப் அம்பேத்கரை பெருமைப்படுத்த முயலவில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ‘பாரத ரத்னா’ விருதுகளை தன்னுடைய குடும்பத்தாருக்கு கொடுத்தார்கள்.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய தலைவரை பற்றி எந்த உத்தரவாதம் இல்லையோ, அவர்கள் மோடியின் உத்தரவாதம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எங்களுடைய 10 ஆண்டுகால வளர்ச்சியை உலகம், நாடு ஏன் அப்படி ஒரு பார்வை பார்க்கிறது.நாங்கள் சொல்லியதால் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் செய்த பல நல்ல பணிகளின் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் அவர்களை எந்தவிதமான குற்றமும் சொல்லவில்லை. அவர்களுடைய கட்சிக்காரர்களே அவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை சொல்லி இருகிறார்கள்.

சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவை உறுப்பினர்கள் நம்முடைய நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது, ஜிடிபி வளர்ச்சி குறைந்துவிட்டது, விலைவாசி சில வருடங்களாக அதிகரித்தே வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருகிறது என்கின்றனர். இது பாரதிய ஜனதா கட்சி பேச்சு அல்ல. என்னுடைய பேச்சு அல்ல. இது 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் கூறிய வார்த்தைகள்.

இப்போது இரண்டாவதாக ஒரு பேச்சு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். நாடு முழுவதும் மக்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற கோபம் இருக்கிறது. இதையும் டாக்டர் மன்மோகன் சிங் சொன்னார். ஊழல் பற்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரி வசூலில் ஊழல் நடக்கிறது. இதற்காக ஜி.எஸ்.டி. கொண்டு வரவேண்டும். ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகிப்பதில் ஊழல் நடக்கிறது.

இதனால் ஏழை மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள். இதனை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவையும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் சொன்ன வார்த்தைகள். அப்போது வேறொரு மாதிரி சொன்னார். இந்தியாவில் இருந்து தலைநகர் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் போனால் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது. தங்களுக்கு உள்ள குறை மட்டும் தெரிந்திருந்தது. ஆனால் வைத்தியம் என்ன என்று தெரியவில்லை. மந்தம் மற்றும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தைப் பா.ஜ.க. கடுமையான உழைப்பின் மூலமாக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளோம் என தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *